
tamil news ➔ movie reviews ➔ kollywood newsBy sivan|2025-04-24
கேங்கர்ஸ் திரைவிமர்சனம்
சுந்தர் சி, வடிவேலு, கேத்தரின் தெரசா, பகவதி பெருமாள், முனீஸ் காந்த், ஹரிஷ் பரேடி, அருள்தாஸ், மைன் கோபி என பல நட்சத்திர பட்டாள்களின் நடிப்பில் சுந்தர் சி யின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம்.
பள்ளிக்கூடத்தில் அடிக்கடி சிறுமிகள் காணாமல் போய்விடுகின்றனர். இதை அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்க்கும் கேத்தரின் தெரசா காவல்துறைக்கு ரகசியமாக ஒரு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கிறார். அதனை துப்பறியும் நோக்கத்தில் காவல்துறையும் ஒரு ரகசிய போலீசை அந்தப் பள்ளிக்கூடத்திற்கு ஆசிரியராக நியமிக்கிறது. அதே நேரத்தில் அந்தப் பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக ஏற்கனவே இருக்கும் வடிவேலுவுக்கு போட்டியாக சுந்தர் சி யும் உடற்கல்வி ஆசிரியர் வேலைக்கு சேர்கிறார்.
அப்பொழுது கேத்தரின் தெரசா அந்த ஊரில் அருள் தாஸும், மைம் கோபியும் பன்னும் அட்டகாசங்களை எதிர்த்து தட்டிக் கேட்பதால், அவமானப்படுத்தப்படுகிறார். இதனால் ஆதங்கப்படும் சுந்தர் சி அவர்களை மறைமுகமாக தாக்குகிறார். ஆனால் அதற்கெல்லாம் வடிவேலு தான் காரணம் என்று தப்பாக சித்தரிக்கப்படுகிறார். இறுதியில் இவர்கள் நினைத்தபடி அந்த குழந்தைக்கு என்ன ஆனது எதனால் இந்த பள்ளியில் இவ்வளவு பெரிய குழப்பம் நிலவுகிறது என்பதை காமெடி கலந்த கமர்சியல் படமாக சொல்லி இருக்கிறார் சுந்தர் சி.
படத்தின் முதல் பாதி மிக மிக மெதுவான திரைக்கதை. சுவாரசியமான விஷயங்கள் என்று எதுவுமே இல்லை. எல்லாம் பார்த்து பழக்கப்பட்ட விஷயங்கள் மட்டும் தான். மேலும் நகைச்சுவையும் பெரிதாக நகைச்சுவையாக இல்லை.
ஆனால் இரண்டாம் பாதியில் நகைச்சுவை கொஞ்சம் எடுபடுகிறது குறிப்பாக இறுதி காட்சியில் நகைச்சுவை நன்றாகவே எடுபட்டதனால் மட்டுமே படம் நிற்கிறது என்று சொல்லலாம்.
வடிவேலுவின் நகைச்சுவை ஓரளவு சிரிக்க வைப்பதால் வடிவேலுவுக்கு இது ஒரு கம்பேக் என்று ஆறுதலாக கூறலாம். சுந்தர் சி நடிப்பு ஓகே. கேத்தரின் தெரசாவுக்கு டப்பிங் கொடுத்தவர்களோ லிப்சிங்க் பண்ணவார்களோ தயவுசெய்து வசனத்தை எப்படி உச்சரிப்பது என்று கொஞ்சம் சொல்லிக் கொடுத்திருக்கலாம். மற்றபடி மற்ற நடிகர்களின் நடிப்பு ஓரளவு சுமார் ரகம்.
திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம் ஏனெனில் படம் பார்க்கும் பொழுது நமக்கு சுந்தர்சியின் பழைய படங்களை ஞாபகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒரு சில ஆங்கில படங்களையும் காப்பி அடித்தது ஞாபகப்படுத்துகிறது.
படத்தின் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் கேத்ரீன் தெரசாவின் அந்த குத்து பாடல் கலைநயம் மிக்க கவர்ச்சிகரமான பாடல்.
படத்தை விரைவில் முடித்து வெளியிட வேண்டும் என்ற அவசர கதியில் எடுக்கப்பட்டது படம் பார்க்கும்போது நமக்கே புரியும்.
ஆக மொத்தத்தில் வழக்கம்போல் ஒரு சுந்தர்சி படம் அதில் எந்த லாஜிக்கும் பார்க்காமல் நகைச்சுவை என்ற மேஜிக்கை மட்டுமே வைத்து நகர்த்தி இருக்கிறார். குடும்பத்துடன் காண வேண்டிய ஓரளவு நகைச்சுவை அம்சம் கொண்ட படம் இந்த கேங்கர்ஸ் படம்.
