
tamil news ➔ tollywood news ➔ kollywood newsBy sivan|2025-06-28
கண்ணப்பா திரைவிமர்சனம்
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, மோகன் பாபு, ப்ரீத்தி முகுந்தன், சரத்குமார், அக்ஷய் குமார், மோகன்லால், பிரபாஸ் மற்று காஜல் அகர்வால் என பான் இந்தியா நடிகர்கள் நடித்துள்ள படம் தான் கண்ணப்பா திரைப்படம்.
கதைப்படி வாயு லிங்கத்தை மற்றவர்கள் யாரும் பார்த்திடாத அளவுக்கு தான் மட்டுமே அந்த சிவலிங்கத்துக்கு பூஜை செய்ய வேண்டும் என மகாதேவ சாஸ்திரிகள் (மோகன் பாபு) வழிபாடு நடத்தி வருகிறார். சிறு வயதில் காளி தேவிக்கு தனது நண்பனை நரபலி கொடுப்பதை பார்த்து கடவுள் மீதே கடுப்பாகும் திண்ணன் ( விஷ்ணு மஞ்சு) சாமியே இல்லை என நாத்திகனாக வளர அவன் எப்படி சிவனுக்காக தனது கண்களையே தானமாக வழங்கி கண்ணப்பர் ஆகிறார் என்பது தான் கண்ணப்பா படத்தின் கதை.
திரைக்கதைப்படி சிறு வயதில் இருந்தே கடவுள் பக்தி இல்லாத நபராக வளரும் திண்ணன் பெரும் வில்லாளியாக திகழ்கிறான். தனது நண்பன் நரபலி கொடுக்கப்பட்ட நிலையில், இனிமேல், இந்த ஊரில் ஒரு உயிர் கூட போகக் கூடாது என போராடும் வீரனாக மாறுகிறார்விஷ்ணு மஞ்சு. அறிமுக காட்சியிலேயே, கழுகு ஒரு குழந்தையை தூக்கிச் செல்ல திண்ணனாக காட்டும் அவரின் இன்ட்ரோ சிறப்பாகவே உள்ளது.
சிவனை வழிபடும் நெமலியாக ப்ரீத்தி முகுந்தன் கவர்ச்சிக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லாமல் முதல் காட்சியில் இருந்து கடைசி வரை நடித்திருக்கிறார்.
இப்படத்தில் வில்லனாக நடித்த அர்பித் ரங்கா வாயு லிங்கத்தை களவாடி செல்லும் நோக்கத்துடன் திண்ணன் இருக்கும் பட்டியை படையெடுத்து வருகிறான். மற்ற பட்டி இன மக்களை ஒன்று திரட்டி வில்லனை எதிர்க்க தலைவனாக திண்ணனை தேர்வு செய்கின்றனர். ஆனால், காதல் பிரச்னை காரணமாக தந்தை சரத்குமார் தனது மகனை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறார். அதனால், படையெடுத்து வரும் வில்லனின் படையை சரத்குமார் தனியாக எதிர்கொள்ள அவர் உயிரை துறக்கிறார். அப்பாவை கொன்றவனை மொத்த படையுடன் எதிர்கொண்டு வெற்றி காண்கிறான் திண்ணன். கடைசியில் கண்ணப்பா கதைக்கு வரும் இடத்தில் இருந்து படம் இறுதி வரை பக்தி பரவசத்தில் ஆழ்த்துகிறது.
முதல் பாதியில் வழக்கமான தெலுங்கு படம் போலவே நமக்கு தெரிந்தாலும், இரண்டாம் பாதியிலும் அதிலும் குறிப்பாக பிரபாஸ் வந்ததுக்கு பிறகு வரும் காட்சிகள் அனைத்தும் மிகவும் விறுவிறுப்பாக செல்கின்றன.
கண்ணப்பா படம் நியூசிலாந்தில் படமாக்கப்பட்ட நிலையில், அதன் அழகு கொஞ்சும் எழில், அந்த இடத்தை தேர்வு செய்ததற்கான காரணம் எல்லாம் திரையில் தெளிவாகவே தெரிகிறது. பொதுவாகவே புராண கதைகளை படமாக்கும் போது ஏகப்பட்ட சிரமங்களும் கதை சிக்கல்களும் உருவாகும். அதை சாமர்த்தியமாக கையாளும் விதமாக ஒளிப்பதிவாளர் நியூசிலாந்தை முடிவு செய்து இந்த படத்தை எடுத்ததற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். ஒளிப்பதிவிற்காகவே இந்த படத்தை நான்கு ஐந்து முறை கூட சலிக்காமல் பார்க்கலாம்.
மணி ஷர்மா மற்றும் ஸ்டீவன் தேவசியின் இசை, பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகம். ஆனால் பின்னணி இசை படத்தை இரண்டு படி மேலே உயர்த்தி தூக்கிப் பிடித்திருக்கிறது.
கண்ணப்பா கதை அந்த மகா சிவராத்திரியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதை மட்டுமே பக்தர்கள் அறிந்த நிலையில், கண்ணப்பாவுக்கு ஒரு முன் கதை மற்றும் மகாபாரத கனெக்ட் உள்ளிட்டவற்றை கூடுதலாக இயக்குநர் சேர்த்திருக்கிறார். அது பெரிய ட்விஸ்ட் இல்லை என்றாலும் அந்த கற்பனையை ரசிகர்களால் ரசிக்க முடிகிறது.
காலஹஸ்தி கோயிலுக்குச் சென்று வாயு லிங்கத்தை வழிபடும் அனைவருக்கும் கண்ணப்பா கதை தெரிந்திருக்கும். மகாபாரதம், ராமாயணம் கதைகளை பிரம்மாண்ட படமாகவும் தொலைக்காட்சி தொடர்களாகவும் பலரும் எடுத்து வெளியிட்டுள்ளனர். வெளியிட்டும் வருகின்றனர். அந்த வரிசையில், கண்ணப்பா கதையை பிரம்மாண்ட படமாகவே மோகன் பாபு தனது தயாரித்துள்ளார்.
ஆக மொத்தத்தில் கண்ணப்பா படம் குடும்பத்துடன் காணக்கூடிய மற்றும் ஒளிப்பதிவுக்காக மட்டுமே காணக்கூடிய ஒரு தரமான படம்.
