சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன், நடிகர் சத்யராஜ் 1980 களில் இணைந்து நடித்தார். அதன் பின்னர் இருவரும் தனித்தனி பாதையில் பயணிக்க ஆரம்பித்தனர். சத்யராஜ் அமைதிப்படை, கடலோர கவிதைகள், வேதம் புதிது என பல்வேறு கதையம்சங்கள் கொண்ட படங்களில் தொடர்ந்து நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார். ரஜினிகாந்த் உடன் அவர் நடித்த மிஸ்டர் பாரத் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் வரும் என்னம்மா கண்ணு சௌக்கியமா என்ற பாடல் இன்றளவும் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் 40 ஆண்டுகளாக இருவரும் எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. அந்தக் குறை தற்போது நிவர்த்தி ஆக உள்ளது. ரஜினிகாந்த், நடிக்கும் புதிய படத்துக்கு கூலி என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டைரக்ட் செய்கிறார். இந்த நிலையில் மலை பிடிக்காத மனிதன் என்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சத்யராஜ், கூலி படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிக்க இருப்பதாக கூறினார். அந்தப் படத்தில் தான் ரஜினியின் நண்பனாக வருவதாகவும் சத்யராஜ் கூறியுள்ளார். மேலும் நரேந்திர மோடியின் பயோபிக்கில் நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்த சத்யராஜ், " தாம் அவ்வாறு நடிக்க கையெழுத்து இட வில்லை" என்றார். கூலி படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் விவரம் ஜூன் முதல் வாரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. சிவாஜி படத்தில் மிஸ் ஆனது கூலி படத்தில் கைகூடுகிறது.