விடாமுயற்சி திரைவிமர்சனம்

அஜித் குமார், திரிஷா, அர்ஜுன் ரெஜினா இன்னும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம்.

12 வருடங்கள் நல்ல கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் அஜித்திற்கும் திரிஷாவுக்கும் இடையே உருவான சின்ன விரிசலால் விவாகரத்து வரை செல்கிறது. இந்நிலையில் திரிஷா தனது தந்தை வீட்டுக்கு செல்வதற்காக அஜித்துடன் காரில் பயணம் செல்கிறார். அப்பொழுது வழியில் கார் பிரேக் டவுன் ஆக, டிரக் டிரைவர் ஆன அர்ஜுனும் அவரது மனைவி ரெஜினாவும் திரிஷாவுக்கு லிப்ட் கொடுத்து பக்கத்தில் இருக்கும் கடைக்கு அழைத்துச் செல்வதாக கூட்டி செல்கின்றனர். ஆனால் அங்கு த்ரிஷா வரவே இல்லை என்று கூறுகின்றனர். அதன் பிறகு திரிஷா எங்கே இருக்கிறார் யாரால் கடத்திச் செல்லப்பட்டார் என்பதை கண்டுபிடிப்பதே விடாமுயற்சி படத்தின் கதை.

பிரேக் டவுன் படத்தின் கதையை அப்படியே எடுத்து விட்டால், இது பிரேக் டவுன் தான் என்று கூறி விடுவார்களோ என்ற ஒரே காரணத்திற்காக இரண்டாம் பாதி கதையை முற்றிலுமாக மாற்றி இருக்கிறார்கள்.

படத்தில் அஜித் திரிஷாவின் காதல் காட்சிகள் மிகவும் துள்ளலாக உள்ளன. கிட்டத்தட்ட ஐந்து படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர், ஐந்து படங்களிலும் இவர்களின் காதல் காட்சிகள் சிறப்பாக உள்ளது ஒரு மேஜிக். அர்ஜுன் வழக்கம்போல் தனது அதிரடி ஆக்சன் காட்சிகளை கொடுத்துள்ளார். ரெஜினாவின் வில்லத்தனமான நடிப்பு அற்புதம். ஆரவின் கண்கள் அழகாக உள்ளன.

அனிருத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவு மிக மிக அருமையாக உள்ளது. அசர்பைஜான் நாட்டினை மிக தத்துரூபமாக அழகாக படம் பிடித்து காட்டி இருக்கிறார் ஓம் பிரகாஷ்.

மகிழ்திருமேனி இந்த கதையை எதார்த்தமாக சொல்ல முயற்சித்து இருக்கிறார்.

படத்தில் குறையாக பார்க்கப்படுவது, படம் மிக மெதுவாக செல்வதே. மேலும் அஜித் ரசிகர்களுக்கு தீனி போடும் காட்சிகள் எதுவும் இல்லாதது ஒரு ஏமாற்றமே.

மற்றபடி விடாமுயற்சி படத்தை, ஒரு கதை அம்சம் கொண்ட படம் என்று நினைத்துப் பார்த்தால் நன்றாகவே இருக்கும்.