வெளியானது அமரன் பட ட்ரெய்லர்?
இந்திய ராணுவ வீரர்களின் கண்ணீரையும் ரத்தத்தையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது!
அமரன் படத்தின் மீது படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அனைவருக்கும் நல்ல எதிர்பார்ப்பு இருக்கின்றது. காரணம், படம் நமது இந்திய நாட்டிற்காக தனது உயிரைத் தியாகம் செய்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடைபெற்றதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையப்படுத்தி ராகுல் சிங் மற்றும் ஷிவ் ஆரூர் எழுதிய இந்தியாஸ் மோஸ்ட் பிராய்லர்ஸ்: ட்ரூ ஸ்டோரி ஆஃப் மாடர்ன் மிலிட்டரி என்ற புத்தகமும் இப்படம் எடுக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது.
படத்தில் ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும், முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபக்கா வர்க்கீஸாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், படத்தின் பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தின் இசை வெளியீட்டு விழாவும் கடந்த 18ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில் இன்று படத்தின் ட்ரைலரை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.
டிரெய்லர் மொத்தம் 2 நிமிடங்கள் 20 நொடிகளுக்கு உள்ளது. முதல் ஷாட்டே வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த வரதராஜன் தனது மகளுக்கு பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை பாடலைக் கற்றுக் கொடுக்கின்றார். அதிலிருந்து அந்த ஷாட் சிவகார்த்திகேயனுக்கு மாறுகின்றது. இதில் இருந்து இது உண்மைக்கு நெருக்கமாக ரத்தமும் சதையுமாக எடுக்கப்பட்ட படம் என்பது புரிகின்றது. இதுமட்டும் இல்லாமல் முதல் ஷாட்டே இவ்வாறு இருப்பதால் கனத்த இதயத்துடனே ட்ரைலர் முழுவதையும் அணுக முடிகின்றது.
அதன் பின்னர் நேரடியாக ராணுவத் தளவாடம் காண்பிக்கப்படுகின்றது. அங்கு வீரர்கள் பயிற்சி எடுப்பது, திடீரென வீரர்கள் தங்கியுள்ள கூடாரத்தின்மீது தீவிரவாதிகளோ அல்லது எதிரிகளோ தாக்குதல் நடத்துகின்றார்கள். அப்போது வீரர்கள் தயாராகும் வேகம், அந்த நெருக்கடியிலும் வீரர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் ராணுவ மேஜர் என புல்லரிக்க வைக்கின்றது. மேலும் ராணுவம்தான் எனது வாழ்க்கை எனக் கூறும் மகனின் உறுதியும், ஒத்த ஆம்பள புள்ளையும் ஆர்மிக்கு போறேன்னு சொல்ற எனும் தாயின் பாசமும் கைத்தட்டல்களை குவிப்பது மட்டும் இல்லாமல், நெஞ்சில் நிற்கின்றது.
சிவகார்த்திகேயனுக்கும் சாய் பல்லவிக்கும் இடையிலான காதல் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும், சாய் பல்லவி, ராணுவ வீரனின் மனைவியாக இருப்பதில் பெருமைகொள்கின்றேன் எனக் கூறும்போது கண்ணீர் வரவைக்கின்றது. தீவிரவாத அமைப்புகளை விரட்டி விரட்டி வேட்டையாடும் காட்சிகளில் ” இந்திய ராணுவத்தின் முகம் இதுதான்” என சிவகார்த்திகேயன் பேசும் வசனத்திற்கு தியேட்டரில் விசில்களும் கைத்தட்டல்களும் உறுதி. ட்ரைலரின் இறுதி ஷாட்டிலும் மகள் தனது அம்மாவை நோக்கி அப்பா பிறந்த நாளுக்கு வருகின்றேன் எனக் கூறினாரே வருவாரா எனக் கேட்டு முடிகின்றது. இந்த காட்சியும் குரலும் கண்ணீரை வரவழைகின்றது.
அமரன் படம் வீரம் சிந்திய இந்திய ராணுவ வீரர்களின் கண்ணீரையும் ரத்தத்தையும் பறை சாற்றும் என்பதில் ஐயமில்லை என்ற நம்பிக்கையை டிரெய்லர் கொடுக்கின்றது.