சசிகுமார் நடிக்கும் பிரீடம் படத்தின் கதை,

இலங்கைத் தமிழர்கள் பற்றிய கதையா?

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எம் சசிகுமார் அவர்கள் தற்போது வரை சுப்ரமணியபுரம் & ஈசன் எனும் இரண்டே திரைப்படத்தை இயக்கியுள்ளார். இவரது முதல் படமான சுப்ரமணியபுரம் வரலாற்று வெற்றியை பெற்றது. மேலும் பல விருதுகளை குவித்து இருந்தது. இந்தி இயக்குனர் அனுராக் காஷியாப் கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படம் எடுப்பதற்கு இப்படமே தூண்டுதலாக இருந்தது எனவும் அவர் தெரிவித்து இருந்தார். இருப்பினும் சசிகுமாரின் இரண்டாவது படமான ஈசன் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பல்வேறு காரணமாக சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அவர் எவிடன்ஸ், நா நா & பகைவனுக்கு அருள்வாய் எனும் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நந்தன் திரைப்படமும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது . சத்யசிவா எழுதி இயக்கிய சசிகுமாரின் ‘ஃப்ரீடம்’ படத்தில் ஜெய் பீம் படப் புகழ் லிஜிமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் பல பிரபலமான முகங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ‘ஃப்ரீடம்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கில் சசிகுமார் தீவிரமான தோற்றத்தில் இருந்தார். தலைப்பிற்குக் கீழ் டேக் லைனாக ‘ஆகஸ்ட் 14’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஃபிரீடம் படத்தின் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இலங்கையில் நடந்த போரினால் தமிழ்நாட்டிற்கு தப்பி வரும் தமிழர்களின் உண்மையான வாழ்வியலை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. மேலும் குண்டு வெடிப்பில் பலியான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்தால் அப்போது தமிழ்நாட்டிலிருந்த இலங்கைத் தமிழர்கள் எதிர்கொண்ட பிரச்னைகளைப் பேசும் படமாக இது உருவாகியுள்ளது.

படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் ஒரு சில காட்சிகளின் அடிப்படையில் பல ஆண்டுகள் சிறையில் இருந்து சமீபத்தில் விடுதலையான பேரறிவாளன் உட்பட எழுவர் குறித்த கதையாக இருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் பேச்சு எழுந்துள்ளது. மேலும் ஈழம் குறித்தான கதையம்சம் கொண்ட படங்களை உருவாக்க விரும்பிய இயக்குனர் மற்றும் சசிக்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.