மெய்யழகன் படத்தின் நீளத்தை குறைப்பதில் சூர்யாவுக்கு உடன்பாடு இல்லை – இயக்குனர் பிரேம்

மெய்யழகன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், அந்தப் படத்தில் பேசப்படும் தொடர் வசனங்களையும், படத்தின் நீளத்தையும் பலரும் விமர்சித்த வண்ணமே இருந்தனர்.

இதனால், சமீபத்தில் படத்தின் நீளம் 18 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. இதுகுறித்து அப்படத்தின் இயக்குநர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இருப்பினும், படத்தின் நீளத்தை குறைத்தது வருத்தத்தை அளித்ததாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் பேட்டியில், முதலில் படத்தின் காட்சிகள் அவற்றின் நீளம் குறித்து வெளியான விமர்சனங்கள் வருத்தத்தை அளித்தது. இருப்பினும், அவற்றை குறைக்க நான் சம்மதிக்கவில்லை. இதில், நடிகர் சூர்யாவிற்கும் கார்த்திக்கிற்கும் சுத்தமாக விருப்பமில்லை. இருவரும் காட்சிகளை குறைக்கவே கூடாது எனக் கூறினர்.

நம்ம பிள்ளைய நாமே குறை சொல்லக் கூடாது. நாமலே நம்ம பிள்ளையின் மூக்கு சரியில்ல.. காது சரியில்லன்னு சொல்லலாமா? நாம என்ன எடுத்தமோ அத அப்படியே இருக்கட்டும்ன்னு இருவரும் என்னிடம் கூறினர்.

காட்சியை குறைக்கலாம் என மீண்டும் சூர்யாவிடம் கேட்டபோது, நல்லா இருக்கும் விஷயத்தை ஏன் குறைக்க வேண்டும். எது எடுத்தமோ அது அப்படியே இருக்கட்டும். அதையும் ரசிக்கும் மக்கள் இருக்காங்க என அழுத்தமாக கூறினார்.

பின், படத்தை ஒரு சிலர் ரசித்தாலும், அதை ரசிக்காதவர்களும் தானே இருக்கிறார்கள். அவர்களும் தானே நம் படத்தை காண வரும் ரசிகர்கள். படம் பிடிக்கவில்லை என யாராவது கூறினால், அவர்களை அப்படியே போகட்டும் என விட முடியாது அல்லவா? படத்தை பிடிச்சவங்க, பிடிக்காதவங்க என எல்லாரும் சேர்தது தான் ஆடியன்ஸ் என நாங்கள் சமாதானப்படுத்தினோம்.

இந்தப் படத்தின் நீளத்தைக் குறைக்க என்னைத் தவிர யாருக்குமே பிடிக்கவில்லை. அவர்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை எனக் கூறினார்.

நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 27ம் தேதி வெளியான திரைப்படம் மெய்யழகன். சொந்தங்களால் சொத்தை இழந்து, இரவோடு இரவாக தஞ்சாவூரை விட்டுச் செல்கிறது அரவிந் சாமியின் குடும்பம். 20 ஆண்டுகள் கடந்து, சொந்த ஊரில் நடக்கும் தன் சித்தி மகள் திருமணத்தில் பங்கேற்க, மீண்டும் தஞ்சாவூர் வருகிறார் அரவிந் சாமி. அங்கு அவரை உபசரிக்க வரும் உறவுக்காரர் கார்த்தி உடன், பழக நேர்கிறது. இதற்கடுத்து இவர்களுக்குள் நடக்கும் உரையாடல் தான் மொத்த படமும்.

சுமார் 3 மணி நேரம் ஓடும் இந்தத் திரைப்படத்தின் நீளம் குறைக்குமாறு பலரும் விமர்சித்ததால், சில நாட்களுக்கு முன் படத்தின் நீளம் 18 நிமிடங்கள் 42 நொடிகள் குறைக்கப்பட்டு, 2 மணி நேரம் 38 நிமிடங்களாக திரையிடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.