மருத்துவமனையில் ரஜினிகாந்த் திடீர் அனுமதி

திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு திங்கள் இரவு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இரவு திடீரென அவருக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்றால் அது ரஜினி தான். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. வசூல் சாதனையில் புதிய உச்சத்தை எட்டியது.

அவரது நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அடுத்த வாரம் ரிலீஸாகிறது. ஜெய்பீம் ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

இதற்கிடையே 73 வயதான ரஜினிகாந்த்திற்கு திங்கள் இரவு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கவலைப்படத் தேவையில்லை என்றே மருத்துவர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது.

இப்போது மருத்துவ சோதனைகள் நடைபெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை ரஜினிகாந்த்தின் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை தரப்பில் இருந்து எந்தவொரு விளக்கமும் வரவில்லை. இன்று செவ்வாய்க்கிழமை காலை மருத்துவமனை ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து செய்திக்குறிப்பை வெளியிடலாம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் கூலி படத்தின் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டிருந்த நிலையில், திடீரென மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார். அதேநேரம் சாதாரண பரிசோதனைக்காகவே ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தகவல் அளித்துள்ளார்.

அதேநேரம் கடந்த 2020 டிசம்பரில், ரஜினிகாந்த் இதே மருத்துவமனையில் இதேபோன்ற உடல்நலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் உடல்நிலை குறித்த தகவல் செவ்வாய் காலை இன்னும் தெளிவாகத் தெரிய வரும் என்று தெரிகிறது.