தனக்கென அழுத்தமான கதைகள் மூலம் தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் எனப் பெயரெடுத்தவர் பாலா.
கடுமையான சண்டைக்காட்சிகள், பதற்றத்தைத் தரும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் என தன் திரைப்படங்களுக்கென தனி ரசிகர்களையே வைத்திருக்கிறார்.
பரதேசி படத்திற்குப் பின் பாலாவின் பெயர் சொல்லும் படம் எதுவும் அவருக்கு அமையவில்லை. நாச்சியார் வெளியாகி கவனம் பெற்றது. ஆனால், அதிர்வுகளைக் கிளப்பவில்லை. தொடர்ந்து, துருவ் விக்ரமை வைத்து அர்ஜுன் ரெட்டியின் தழுவலாக ‘வர்மா’ படத்தை எடுத்தார்.
ஆனால், அப்படத்தில் திருப்தி இல்லாததால் நடிகர் விக்ரம் தன் மகனின் முதல் படம் பாலாவின் திரை மொழியிலிருந்தால் சரியாக இருக்காது என வேறொரு தயாரிப்பு நிறுவனத்தை அணுகினார். தொடர்ந்து, ‘ஆதித்ய வர்மா’ என்கிற பெயரில் அப்படத்தை ரீமேக் செய்தனர்.
படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்றாலும் துருவ் விக்ரமின் முகம் ரசிகர்களிடம் சென்றது. வர்மா சிக்கலால், வணிக ரீதியாக பாலாவின் பெயர் சரிவைச் சந்தித்தது. அதற்கு பின், நடிகர் சூர்யா தயாரிப்பில் அவரை நாயகனாக வைத்தே வணங்கான் படப்பிடிப்பைத் துவங்கினார்.
ஆனால், பாலாவின் மேக்கிங்கும் படப்பிடிப்பில் ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளும் சூர்யாவை பாதிக்க, அவர் உடனடியாக படத்திலிருந்து விலகினார். பொதுவெளி நாகரீகத்திற்காக இவரும் ‘அன்பாக’ அறிக்கை வெளியிட்டு பிரச்னையை தங்களுக்குள் வைத்துக்கொண்டனர்.
சூர்யா கிளம்பியதும் அக்கதாபாத்திரத்தில் நடிகர் அருண் விஜய் இணைந்தார். பல நாள்களாக படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். ஆனாலும், படம் இன்னும் வெளியாகவில்லை.
தணிக்கை வாரியம் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே, படத்திற்கு வணங்கான் என பெயரிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால், இந்தாண்டாவது படம் திரைக்கு வருமா என கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தப் பிரச்னைகளெல்லாம் முடிந்து பாலா பெரிய வெற்றியைக் கொடுப்பரா என்ற எதிர் பார்ப்பு ரசிகர்களிடம் மேலோங்கி உள்ளது.