மலையாள படங்களில் நடித்து பேசப்பட்டவர் நடிகை ஷகீலா. இவரது படங்கள் வெளியானால் மலையாள சூப்பர் ஸ்டார் படங்கள் கூட மண்ணை கவ்வும் நிலை ஏற்பட்டதால், அங்கிருந்து ஷகீலாவை விரட்டியதாகவும் சொல்லப்படுவது உண்டு.
தற்போது, ஹேமா அறிக்கை வெளியானதையடுத்து, நடிகை ஷகீலா மலையாள திரையுலகில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து விவரித்துள்ளார்.
இது குறித்து நடிகை ஷகீலா கூறியிருப்பதாவது, கலாபவன் நடித்த ஒரு படத்தில் எனக்கு வேலைக்கார பெண் வேடம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் ஹீரோயினாக ரூபஸ்ரீ நடித்தார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. காலையில் அவர் ஊருக்கு புறப்பட வேண்டும். கெஸ்ட் ஹவுசில் எங்கள் இருவருக்கும் எதிர் எதிர் அறைதான்.
அப்போது, இரவில் ஒருவர் வந்து, ரூபஸ்ரீ அறையை தட்டினார். தட தடவென சத்தம் கேட்டு, நான் கதவை திறந்து வெளியே வந்தேன். அவர் ரூபஸ்ரீயை வெளியே வரும்படி சத்தம் போட்டு கொண்டிருந்தார், இதை பார்த்த நான் அவரை அங்கிருந்து விரட்டினேன். கெஸ்ட் ஹவுஸ் ஊழியர் ஒருவரும் எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தார் . பின்னர், காலையில் ரூபஸ்ரீயை பாதுகாப்பாக அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது . மேலும், நடிகை ரேஷ்மா மற்றும் மரியா ஆகியோரையும் வன்கொடுமை சம்பவத்தில் இருந்து ஒரு முறை காப்பாற்றினேன்.
அனைத்து மொழி படங்களிலும் இதே போன்ற பிரச்னைகள் இருக்கத்தான் செய்கிறது. அனைத்து திரையுலகத்திலும் பவர் குரூப் உள்ளது. மலையாளத்தில் முகேஷ் போன்றவர்கள் அந்த குரூப்பில் உள்ளனர். நடிகர் மம்முட்டி, மோகன்லால் போன்றவர்களும் அதில் முக்கியமானவர்கள் என்று கூறியுள்ளார்.
மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான அம்மாவின் தலைவராக நடிகர் மோகன்லால்தான் இருந்தார். தற்போது, பாலியல் விவகாரம் வெடித்து கிளம்பியதால் அவர் உள்ளிட்ட 17 பேர் பதவியை ராஜினாமா செய்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.