வேலராமமூர்த்தி, மாரிமுத்து, ரமா, தீபா இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்து புது முக இயக்குனர் நாகராஜ் கருப்பையா இயக்கிய குடும்ப படம்.
ஊரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு, கெட்டதில் விழுந்த சொந்தம் நல்லதில் எழுந்து நிற்கும்.
இதையே கருவாக எடுத்து இந்த படத்தை திரைக்கதை ஆக்கி இருக்கிறார்கள்.
வீராயி என்கிற பெண் தன் கடின உழைப்பால், தனது மூன்று மகன் மற்றும் மகளை மிகவும் பாசமாகவும் நேசமாகவும் வளர்கிறார். அதிலும் மூத்த மகனான வேலராம மூர்த்தியின் மனைவி ரமாவை மிகவும் புகழ்ந்து தள்ளுகிறார்.
இது பிடிக்காத இரண்டாவது மகனின் மனைவி பொறாமையால் பொங்கி எழுகிறார், அந்த நேரத்தில் கிராமத்தில் ஒரு மிகப்பெரிய பஞ்சம் நிலவவே, வேலராம மூர்த்தியின் குடும்பம் பிழைப்பிற்காக திருப்பூர் செல்ல நேரிடுகிறது. மாரிமுத்து குடும்பம் மட்டுமே தன் தாயை பார்த்துக் கொள்கிறது. இந்நிலையில் இரண்டாவது மருமகள், மாமியாரை குத்திக்காட்டி பேச பேச, தாயான வீராயி வீட்டை விட்டு வெளியே சென்று கோயிலுக்குள் தஞ்சம் புகுகிறார். ஒரு கட்டத்தில் இறந்தே விடுகிறார். இதனால் அந்த குடும்பத்திற்குள் மிகப்பெரிய சண்டை நடந்து குடும்பமே சில்லு சில்லாக உடைந்து விடுகிறது. மீண்டும் அந்த குடும்பம் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதே படத்தின் கதை.
மாயாண்டி குடும்பத்தார், முத்துக்கு முத்தாக வரிசையில் ஒரு அழகான குடும்ப பங்கான படம். மேற் சொன்ன இரண்டு படங்களில் கூட வணிக ரீதியான சில காட்சிகள் புகுத்தப்பட்டிருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த மாதிரியான காட்சிகள் எதுவும் புகுத்தப்படவே இல்லை.
எப்பொழுதுமே ஓவர் ஆக்டிங் என்று சொல்லக்கூடிய வேலராமமூர்த்தி மாரிமுத்து மற்றும் தீபா ஆகியோரை, Under play செய்ய வைத்து அவர்களுடைய கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார் இயக்குனர்.
இது ஒரு கிராம பாங்கான படம் என்பதால், ஒளிப்பதிவாளர் கிராமத்தில் வாழும் எளிமையான மனிதர்களையே படம் பிடித்திருக்கிறார்.
இந்தப் படத்தின் இசை மிகவும் அருமையாக இருந்தது. படத்திற்கு கூடுதலான வலுவையும் சேர்த்தது.
படம் ஆரம்பத்தில் பார்ப்பதற்கு மிகவும் ஸ்லோவாக போகும் என்று தோன்றும். ஆனால் இந்த கதைக்கு அந்த ஸ்லோ தேவை என்பது போகப் போக புரியும்.
இந்தப் படத்தில் கூடுதலாக பாராட்டக்கூடிய விஷயம், இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தான் இந்த படத்தின் கதையின் நாயகனாகவும் இருக்கிறார். கதையின் நாயகன் என்பதற்காக அவருக்கென்று தனிப்பட்ட காட்சிகள் எதையுமே இயக்குனர் எடுக்கவில்லை. படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கொடுத்து வலு சேர்த்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த படங்களில் இதுவும் ஒரு படமாக கருதப்படும். ஆனால் இந்தப் படத்தை மக்கள் திரையரங்குகளில் வந்து பார்ப்பார்களா என்பது தான் கேள்வி குறி? இதற்கு வலுவான காரணமாக பார்க்கப்படுவது மக்கள் மத்தியில் வீராயி மக்கள் என்ற பெயர் இன்னும் போய் சேராததே.
சில நல்ல படங்களுக்கு மக்களிடமிருந்தும் ஆதரவு தேவைப்படுகிறது. இல்லையெனில் கடைசி விவசாயி, ஜமா, வீராயி மக்கள் போன்ற மண் சார்ந்த படங்களை பார்ப்பது அரிதாகிவிடும்.