அறிமுக நடிகர் பாரி இளவழகன் எழுதி இயக்கிய படம் ஜமா..
அம்மு அபிராமி, சேந்தன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தந்தையின் நாடக கம்பெனியான அம்பலவானன் நாடக கம்பெனியை (ஜமாவை) தன் சுயநலத்திற்காக அபகரித்த சேந்தனிடமிருந்து, காதநாயகனான பாரி எப்படி திரும்ப வாங்குகிறார் என்பதே கதை கரு.
கேட்பதற்கு ரொம்ப சாதாரண கதையாக இருந்தாலும், திரைக்கதையின் மூலம் ஒரு மேஜிக் செய்திருக்கிறார் இயக்குனர் மற்றும் நடிகர் பாரி.
படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைவரையும் செவ்வனே வேலை வாங்கியிருக்கிறார் இயக்குனர். குறிப்பாக சேந்தன் மற்றும் அம்மு அபிராமி நடிப்பு அபாரம்.
படத்தின் ஒளிப்பதிவாளர், கலை மற்றும் கலாச்சாரம் அனைத்தையும் நிதர்சனமான உண்மையுடன் படம் பிடித்து காட்ட வேண்டும் என்ற பொறுப்புடன் பட்ட மெனக்கெடல் படம் முழுவதும் பளிச்சிடுகிறது.
படத்தில் தேவை இல்லாத வசனங்கள் இல்லாதது மிக பெரிய ஆறுதல்.
வசந்த பாலனின் காவியத் தலைவன், நாசரின் அவதாரம் படங்களும் தெரு கூத்து, நாடகம் பற்றி பேசும் படங்கள் தான்.. ஆனாலும் அந்த படங்களில், வணிக ரீதியாக சில சமரசங்கள் அப்பட்டமாக தெரியும். ஆனால் இந்த படத்தில் அந்த சமரசம் இல்ல. ஒரு வேளை நடிகரே தயாரிப்பாளர் என்பதாளோ என்னவோ..?
ஆனால் இங்கு இளையராஜாவின் விஷயம் பற்றி கொஞ்சம் பார்க்க வேண்டி இருக்கிறது. அவதாரம் படத்திற்கான இசையை அமைத்த இளையராஜா, குறிப்பாக தென்றல் வந்து பாடல் இன்றும் அவரின் எவர்க்ரீன் பாடல்களில் ஒன்றாக இருக்கக்கூடிய பாடல். ஆனால் அப்பேர்ப்பட்ட இளையராஜா இந்த படத்தில் ஓரவஞ்சனை செய்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் தெருக்கூத்து தமிழ்நாட்டின் இலக்கியம், நடிப்பு, இயல், இசை, நாடகம் ஆகியவற்றின் முதல் முகவரி. அதற்கு நம்மால் மரியாதை செலுத்த முடியாமல் கூட போகலாம். ஆனால் அவமானப் படுத்தாமல் இருப்பது மிகச் சால சிறந்தது. இந்த தெருக்கூத்து கதைக்கு இளையராஜா இசை அமைக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அவதாரம் படத்திற்கு கொடுத்த அதே இசையை இதில், கொடுத்து இருந்தாலே போதும் இந்த படம் மக்களிடம் மிகப்பெரிய ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவருடைய உதவியாளர்கள் யாரோ ஒருத்தர் இசையமைத்தது போல் இதில் இருக்கிறது.
இந்தப் படத்தில் இரண்டாவது எதிர்மறை கருத்தாக பார்க்கப்படுவது எதுவென்றால், இது மக்களுக்கான ஜனரஜகமான படம் இல்லை. ஆனால் மிகவும் முக்கியமான ஒரு படம். மிகப்பெரிய ஆவணப்பதிவு. ஆனால் இதற்கு திரையரங்குகளும் கிடைக்காது. மக்களும் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டார்கள். காரணம் என்னவென்றால் இந்தப் படத்தில் ஆர்டிஸ்ட் வேல்யூ என்று சொல்லக்கூடிய கதாபாத்திரங்களுக்கான மதிப்பு எதுவுமே இல்லை என்பது மட்டுமே. பாவம் மக்களும் என்ன செய்வார்கள், கஷ்டப்பட்டு தானே ஒரு டிக்கெட்க்காக மினிமம் 200 ரூபாய் செலவு செய்கிறார்கள். அதை செலவு பண்ணும் போது பொழுதுபோக்கு அப்படிங்கிற ஒரு காரணத்திற்காக மட்டுமே செலவு பண்ணனும் என்றே நினைப்பார்கள். ஆகையால் இந்த மாதிரி கதை அம்சம் கொண்ட மிக நேர்த்தியான திரைக்கதை கொண்ட ஒரு கலையை ஒரு கலாச்சாரத்தை உறுதிப்படுத்துகிற இந்த படத்தை மக்கள் பெரிதாக ஆதரிப்பாளர்களா என்பது மிகவும் பெரிய கேள்விக்குறி..? ( விஜய் சேதுபதி கிட்டத்தட்ட ஐந்து கோடி செலவு செய்து, எடுக்கப்பட்ட படமான மணிகண்டனின் இயக்கத்தில் உருவான கடைசி விவசாயி படத்தையே தூக்கி எறிந்த மக்கள், இந்தப் படத்தை தூக்கி எறிய மாட்டார்களா என்ன? )
ஆனால் இதனால் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் நடிகர் இந்த படக் குழுவினர் யாரும் தயக்கம் கொள்ள வேண்டாம். திரைத்துறையில் இந்த படம் மிகவும் பிரபலமாக பேசப்படும். உங்களின் திறமை பரிசீலிக்கப்படும். உங்களுக்கான வாய்ப்பும் கிடைக்கும். ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டுமே, மக்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக உங்களுடைய அடையாளத்தை தொலைத்து விடாதீர்கள்.
ஆக மொத்தத்தில் ஜமா குடும்பத்துடன் பார்க்க வேண்டிய, மறந்து போன மரபை திரும்பவும் மீட்டெடுப்பதற்கான முயற்சியாக அவர்கள் பயன்படுத்திய யுத்தியை பார்க்கக்கூடிய ஒரு படம்.