தனுஷின் ராயன் படத்தின் வசூல்: தமிழகத்தில் புதிய சாதனை.

தனுஷ் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள அவரின் 50வது படமான ராயன், பாக்ஸ் ஆபிஸில் மாஸான சாதனை ஒன்றை படைத்து இருக்கிறது.

நடிப்பு அசுரன் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தனுஷ். ஆடுகளம், அசுரன் ஆகிய இரண்டு படங்களுக்கும் தேசிய விருது வென்றுள்ள இவர், இளம் வயதிலேயே அந்த விருதை வென்ற முதல் நடிகர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரராகவும் இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது அரை டஜன் படங்கள் உருவாகி வருகின்றன. இம்புட்டு பிசியான நடிகராக இருந்தபோதிலும், இயக்குனராக சாதிக்க வேண்டும் என்கிற வெறியோடு தனுஷ் இயக்கிய 2வது திரைப்படம் ராயன்.

இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. சுமார் 90 கோடி பட்ஜெட்டில் படு பிரம்மாண்டமாக உருவாகி இருந்த இப்படத்தில் தனுஷ் உடன் பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார், செல்வராகவன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆ.ரகுமான் இசையமைத்து இருந்தார். அவரின் பாடல்கள் தான் தற்போது டாப் டிரெண்டிங்கில் உள்ளது.

ராயன் திரைப்படம் கடந்த மாதம் நடிகர் தனுஷின் பிறந்தநாளை ஒட்டி ரிலீஸ் ஆனது. அவர் எதிர்பார்த்தபடியே படமும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் பிறந்தநாள் பரிசாக தனக்கு ராயன் அமைந்ததாக தனுஷே கூறி இருந்தார். விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் மாஸ் காட்டி வரும் ராயன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்து வந்தது. குறிப்பாக வார நாட்களிலும் வசூலில் மாஸ் காட்டியது ராயன்.

அந்த வகையில் தற்போது ராயன் திரைப்படம் வெளியான 6 நாட்களில் ரூ.100 கோடி என்கிற இமாலய வசூல் சாதனையை படைத்துள்ளது. நடிகர் தனுஷ் இயக்கிய படங்களில் 100 கோடி வசூலித்த முதல் படம் இதுவாகும். அதுமட்டுமின்றி தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை சென்சாரில் ஏ சான்றிதழ் வாங்கிய எந்த தமிழ் படமும் 100 கோடி வசூலித்ததில்லை. அந்த சாதனையை முதன்முறையாக நிகழ்த்தி வரலாறு படைத்துள்ளது ராயன் திரைப்படம்.