மெமரீஸ் திரைவிமர்சனம்

வெற்றி, பார்வதி அருண், ரமேஷ் திலக், ஆர்.என்.ஆர்.மனோகர் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் மெமரீஸ். இப்படத்தை ஷியாம் மற்றும் பிரவீன் என இரண்டு நண்பர்கள் சேர்ந்து கதையமைத்து இயக்கியுள்ளனர்.

கதைப்படி,

நான் லீனியர் களத்தில் ஆரம்பிக்கும் இப்படத்தின் கதையில், நாயகன் வெற்றி மர்மமான ஓர் இடத்தில் அடிபட்ட நிலையில். சிகிச்சை பெற்ற பின் கண் விழிக்கிறார். அப்போது அங்கு வரும் ஒரு நபர், வெற்றி ஒரு இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும். 17 மணி நேரத்தில் அவரை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்கிறார்.

ஆனால், அப்படி கண்டுபிடித்த பிறகு நீ உயிருடன் இருக்க மாட்டாய்” என ட்விஸ்ட் வைக்கிறார், அந்த மர்ம நபர். அடர்ந்த காட்டிற்குள் தான் யார் என்பதை தேடி அலையும் ஹீரோவை, போலீஸ் துரத்துகிறது, அவர்களிடமிருந்து தப்பிக்கும் வெற்றி துப்பாக்கி முனையில் பிடிக்கும் ஆர்.என்.ஆர் மனோகர் “என் மனைவியை மட்டும்தானே கொல்ல சொன்னேன்…என் மகளை என்ன செய்தாய்?” என கேட்கிறார்.

அதிர்ச்சி அடையும் வெற்றிக்கு ஒரு சில விஷயங்களை நினைவுக்கு வருகிறது. ஆனால், வெற்றியை சுற்றி என்ன நடக்கிறது? உண்மையிலேயே அந்த கொலைகளை செய்தது யார்? வெற்றியை துரத்தும் நபர்களுக்கும் ஹீரோவுக்கும் என்ன தொடர்பு? என்பதே படத்தின் மீதிக்கதை.

வெற்றி, தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். வழக்கமான நடிப்பிலிருந்து மாறுபட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் வெற்றி.

ஹீரோயினாக நடித்திருக்கும் பார்வதிக்கு பெரிதாக வேலையில்லை என்றாலும் கொடுத்த பாத்திரத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார்.

மெமரி எரேசிங் மற்றும் மெமரி இன்ஸர்டிங் எனும் ஒரே கான்சப்டை வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஷியாம்-பிரவீன். இவரின் புதிய முயற்சிக்கு பாராட்டுகள். ஆனால், அந்த முயற்சி பெரிதாக எடுபடவில்லை.

படத்திற்கு தேவையான பதட்டத்தை இசையில் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ்.

ஆர்மோ மற்றும் கிரண் ஆகியோரின் ஒளிப்பதிவு அவர்கள் செய்த வேலையின் சுமையை காட்டுகிறது.