மீண்டும் லோகி பக்கம் சாயும் உலக நாயகன்!

கடந்த ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான தக் லைஃப் திரைப்படத்திற்கு எல்லா பக்கமிருந்தும் நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன. வசூல் ரீதியாகவும் படம் நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருகிறது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் உடன் இணைந்து கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. இதனால் இரு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பெரிய அடி விழுந்துள்ளது. முன்னதாக திரையரங்கில் வெளியான 8 வாரங்களுக்குப் பின் ஓடிடியில் வெளியாக இருந்த தக் லைஃப் படம் தற்போது எதிர்பார்த்ததை விட சீக்கிரம் வெளியாகலாம் என சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றிபெற்றது. தற்போது தக் லைஃப் படம் ராஜ்கமலுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனால் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜை தனது தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு படம் இயக்க கேட்டிருப்பதாகவும் சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் விக்ரம் படம் மூலம் பெரிய ஹிட் கொடுத்தார். தற்போது சிக்கலான சூழ் நிலையில் இருக்கும் கமல் தனது ஃபேன்பாயின் உதவியை நாடியுள்ளதாக தெரிகிறது.

இது தவிர்த்து சித்தா, வீர தீர சூரன் ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கும் அடுத்த படத்தையும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் கூலி படத்தை இயக்கி வருகிறார். உபேந்திரா , ஸ்ருதி ஹாசன் , சத்யராஜ் , நாகர்ஜூனா , செளபின் சாஹிர் , ஆமிர் கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு கூலி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த ஆண்டும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான கூலி மட்டுமே தற்போது தமிழ் சினிமாவின் கடைசி நம்பிக்கையாக உள்ளது. குறிப்பாக கமலின் தக் லைஃப் படத்தின் தோல்வியைத் தொடர்ந்து 1000 கோடி வசூல் இலக்கை கூலி படம் எட்டி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,.