சிதாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் தி ஒன் சூர்யா நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியான நிலையில், ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. குடும்ப உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழுவினர் சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர்கள் சுனில் ரெட்டி உள்ளிட்டோர், நடிகைகள் ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ, மமீதா பைஜூ, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், முதன்முறையாக பாடலாசிரியராக மேடையேறியிருப்பது தனக்கு மிகவும் முக்கியமான தருணம் என்று குறிப்பிட்டார். அருண் ராஜா காமராஜுடன் இணைந்து இப்படத்திற்கான பாடல்களை எழுதியிருப்பதாகவும், தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் வெங்கி அட்லூரிக்கு நன்றி என்றும் தெரிவித்தார். ஜி.வி. பிரகாஷ் குமார் தனக்கு நண்பரை விட ஆசான் போன்றவர் என்றும், வெங்கி அட்லூரியின் திரைக்கதை மற்றும் மனிதநேயத்தைப் பாராட்டிய அவர், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் அவரது ஆர்ட் மட்டுமல்ல, ஹார்ட் என்றும் கூறினார். மேலும், சூர்யாவின் எளிமை மற்றும் மனிதநேயத்தை நினைவுகூர்ந்த பாலாஜி வேணுகோபால், இந்தப் படத்தில் குடும்பத் தலைவனாக அவரை ரசிகர்கள் அதிகம் நேசித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
நடிகை பவானி ஸ்ரீ பேசும்போது, படத்தில் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் மேக்னா என்ற கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கிய இயக்குநர் வெங்கி அட்லூரிக்கு நன்றி தெரிவித்தார். சிறு வயது முதலே திரையில் பார்த்து ரசித்த சூர்யாவுடன் இணைந்து நடிக்கும்போது இருந்த தயக்கம், படப்பிடிப்பு தளத்தில் சூர்யா அளித்த ஊக்கத்தால் மறைந்ததாகவும் அவர் கூறினார். ராதிகா சரத்குமார் மற்றும் மமீதா பைஜூ ஆகியோரின் நடிப்பையும் அவர் பாராட்டினார்.
நடிகை ராதிகா சரத்குமார், படத்தை வெற்றியடையச் செய்த ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், நீண்ட காலத்திற்குப் பிறகு குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு அனைவரையும் ஈர்க்கும் ஒரு படமாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ அமைந்துள்ளதாக பாராட்டினார். இயக்குநர் வெங்கி அட்லூரியின் எழுத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்துவமான நியாயமும் உணர்வும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இப்படம் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், இயக்குநருக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும் வாழ்த்தினார்.
நடிகை மமீதா பைஜூ, படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், இதுவரை படத்தை பார்க்காதவர்கள் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். படம் முடிந்து வெளியே வரும்போது மன நிறைவு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், வெங்கி அட்லூரியுடன் ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தில் இணைந்திருப்பதாகவும், தொடர்ந்து மூன்று படங்களும் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். இப்படத்தின் இசைக்கு தெலுங்கு திரையுலகிலும் பாராட்டுகள் கிடைத்ததாகக் கூறிய அவர், படத்தின் இறுதிக்கட்டத்தில் மூன்றே நாட்களில் உருவாக்கப்பட்ட இரண்டு பாடல்கள் தற்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதாகவும், ஆந்திராவில் சூர்யா நடித்த படங்களுக்கான வசூலில் புதிய சாதனையை உருவாக்கியிருப்பதாகவும் ஜி.வி. பிரகாஷ் குமார் கூறினார். சூர்யாவுடன் மீண்டும் இணைந்து பணியாற்றியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அவருடன் இணைந்துள்ள அடுத்தடுத்த படங்களும் வெற்றி பெறும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
இயக்குநர் வெங்கி அட்லூரி பேசுகையில், ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ படங்களைத் தொடர்ந்து தமிழில் முதன்முறையாக இயக்கிய ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்திற்கும் ரசிகர்களும் ஊடகங்களும் அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார். பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சிக்குப் பிறகு கிடைத்த பாராட்டுகள் மற்றும் அன்பை மறக்க முடியாது என்றும் கூறினார்.
ஜி.வி. பிரகாஷ் குமாருடனான தனது நட்பை குறிப்பிட்ட வெங்கி அட்லூரி, ‘வாத்தி’ முதல் தொடர்ந்து மூன்று படங்களில் இணைந்து பணியாற்றியிருப்பதாகவும், இசை உருவாக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் அளித்த முழுமையான ஒத்துழைப்பை பாராட்டுவதாகவும் தெரிவித்தார். சூர்யா தன்னிடம் கதையைக் கேட்டவுடன், எந்த தயக்கமும் இல்லாமல் குடும்பக் கதையில் நடிக்க சம்மதித்ததாகவும், ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற அவரது எண்ணமே இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார்.
‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ரூ.150 கோடி வசூலை கடந்துள்ளதாக தன்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளித்ததாகவும் வெங்கி அட்லூரி தெரிவித்தார். ஒவ்வொரு டிக்கெட்டையும் வாங்கி படத்தை ஆதரித்த ரசிகர்களுக்கும், திரையரங்குகளில் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்திய ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த அவர், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.


