டிசம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இயக்குநரும் இசையமைப்பாளருமான சேகர் கேசவ் சிர்ரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மூலம் முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஆல்பியா, சரத் லோஹிதாஷ்வா, ‘சிங்கிள் பசங்க’ புகழ் ஜிமிகிலி, சில்மிஷம் சிவா, ஷோப்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் வேலை தேடி பெங்களூரு செல்கின்றனர். அங்கு ‘பீட்சா கிங்’ என்ற பிரம்மாண்ட இத்தாலிய உணவகத்தில் வேலைக்குச் சேரும் அவர்களுக்கு, அதன் அகங்காரமிக்க உரிமையாளரால் தொடர்ந்து அவமானங்களும் தொல்லைகளும் ஏற்படுகின்றன. கதாநாயகன் கார்த்திக்கும் உணவக உரிமையாளருக்கும் இடையே மோதல் ஏற்பட, ஐந்து இளைஞர்களும் வேலையிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். ‘பெங்களூருவில் உங்களை வாழவே விடமாட்டேன்’ என வில்லன் சவால் விட, கார்த்தி அதனை ஏற்று, அவனைவிட பெரிய பீட்சா நிறுவனத்தை உருவாக்கிக் காட்டுவதாக சபதம் செய்கிறான்.
கையில் முதலீடு இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு காவேரி (ஆல்பியா) உதவிக்கரம் நீட்டுகிறார். சாலையோரம் இட்லி கடை நடத்தும் அவர், தனது கடைக்கு வெளியே இந்த இளைஞர்கள் பீட்சா கடை தொடங்க இடமளிக்கிறார். இத்தாலிய பீட்சாவுக்கு இந்திய சுவையை சேர்த்து, ரசம் பீட்சா, மசால் தோசை பீட்சா, பிரியாணி பீட்சா மற்றும் இட்லி-பீட்சா கலவையான ‘பிட்லி’ என வித்தியாசமான உணவுகளை உருவாக்குகின்றனர். இந்த புதுமையான பீட்சாக்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி, அவர்களின் கடைக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தருவதுடன், ‘பீட்சா கிங்’ உணவகத்தின் வருமானத்தையும் பாதிக்கிறது.
இதனால் ஆத்திரமடையும் உணவக உரிமையாளர், தன்னால் வேலையிலிருந்து துரத்தப்பட்ட அதே இளைஞர்கள்தான் இந்த வெற்றிக்குக் காரணம் என்பதை அறிந்து, அவர்களை பழிவாங்கும் சதியில் ஈடுபடுகிறார். பீட்சாவில் விஷம் கலந்து உள்ளூர் ரவுடி ஒருவரைக் கொன்றதாகக் கூறி, ஐந்து இளைஞர்களையும் கொலை வழக்கில் சிக்க வைக்கிறார். இந்த பொய்யான குற்றச்சாட்டிலிருந்து தப்பித்து, தங்களது நிரபராதித்தனத்தை நிரூபித்து மீண்டும் வாழ்க்கையில் வெற்றிபெற அவர்கள் மேற்கொள்ளும் போராட்டமே படத்தின் இரண்டாம் பாதியில் பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகிறது.
நாயகனாக அறிமுகமாகும் சிவம் தனது கிரிக்கெட் பயணம் குறித்து பேசுகையில், அண்டர்-16, அண்டர்-19 மற்றும் முதல் டிவிஷன் அளவில் விளையாடிய தொழில்முறை கிரிக்கெட் வீரர் எனத் தெரிவித்தார். கணுக்காலில் ஏற்பட்ட கடுமையான தசை காயம் காரணமாக கிரிக்கெட்டை தொடர முடியாமல் போனதால், நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் திரைப்படக் கல்லூரியில் பயின்று 2022-ல் தங்கப் பதக்கம் பெற்றதாக கூறினார். ‘பீட்சா பாய்ஸ்’ படத்திற்காக முதலில் 20 கிலோ எடையை குறைத்து, பின்னர் சில காட்சிகளுக்காக 20 கிலோ எடையை அதிகரித்து, கிளைமாக்ஸ் காட்சிகளுக்காக மீண்டும் 22 கிலோ எடையை குறைத்ததாகவும் தனது உடல் மாற்றம் குறித்து பகிர்ந்துகொண்டார். பெங்களூருவில் பிறந்து வளர்ந்த தமிழன் என்பதால் அங்குள்ள தமிழ் இளைஞர்களின் பேச்சு, உடல்மொழி மற்றும் வாழ்க்கை முறையை பிரதிபலிப்பது இயல்பாக அமைந்ததாகக் குறிப்பிட்டார். இப்படத்தின் தயாரிப்பாளரான சிவத்தின் தாயார், கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து தனது மகனின் கலைக் கனவை ஊக்குவிக்கும் நோக்கில் படத்தை தயாரித்ததாகவும், படப்பிடிப்பிலும் திரையிலும் அவனுக்கு மிகக் கடுமையான விமர்சகராக இருப்பதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
‘திரள்’ படத்திற்குப் பிறகு மீண்டும் கதாநாயகியாக நடித்துள்ள ஆல்பியா, காவேரி கதாபாத்திரம் ஐந்து இளைஞர்களுக்கும் உறுதுணையாக நிற்கும் எளிமையான பெண் எனக் கூறினார். மாடலிங் மற்றும் விளம்பரத் துறையிலிருந்து வந்த தனக்கு இட்லி கடை நடத்தும் பெண்ணாக நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகவும், படக்குழுவினர் குடும்பமாக இணைந்து பணியாற்றியதாகவும் தெரிவித்தார். மாடலான ஆல்பியாவை ஏன் டீ-கிளாமர் செய்து எளிய பெண்ணாக நடிக்க வைத்தீர்கள் என்ற கேள்விக்கு, இயக்குநர் சேகர் கும்பமேளாவில் பாசி மணி விற்ற பெண் வைரலான நிகழ்வை எடுத்துக்காட்டாக கூறி, அழகு என்பது எந்த சூழலிலும் இயல்பாக வெளிப்படும் என்றும், காவேரி கதாபாத்திரத்திற்கு ஆல்பியா சரியாகப் பொருந்தினார் என்றும் விளக்கினார்.
படத்தில் இடம்பெற்றுள்ள ‘என்ன புடுங்கப் போறான்’ பாடல் வரிகள் குறித்து எழுந்த கேள்விக்கு இயக்குநர், காதல் தோல்வியடைந்த நண்பனை மற்ற நண்பர்கள் கிண்டல் செய்யும் வகையில் அமைந்த நகைச்சுவைப் பாடல் அது என்றும், ஆபாசமான நோக்கம் எதுவும் இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். இருப்பினும் தணிக்கைக் குழுவின் பரிந்துரையை ஏற்று திரையரங்குகளில் ‘என்ன பண்ணப் போறான்’ என மாற்றப்பட்ட வரிகளுடன் பாடல் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.
பெங்களூருவின் பின்னணியில் கதை நடைபெறுவதால், அங்குள்ள இயல்பான சூழலை பிரதிபலிக்கும் வகையில் கன்னடம் மற்றும் கலந்த தமிழ் வசனங்கள் இடம்பெற்றாலும், ‘பீட்சா பாய்ஸ்’ முழுமையான நேரடி தமிழ்த் திரைப்படம் என இயக்குநர் உறுதிப்படுத்தினார். இந்தியில் ‘சிக்கன் கறி லா’ என்ற நீதிமன்றப் படத்தை இயக்கியுள்ள அவர், தனது தாய்மொழியான தமிழில் படம் இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை இப்படத்தின் மூலம் நிறைவேறியதாக தெரிவித்தார். ஐந்து பாடல்கள், அதில் இயக்குநர் சேகர் இசையில் மூன்று பாடல்கள் மற்றும் மற்றொரு இசையமைப்பாளர் இசையில் இரண்டு பாடல்கள், இரண்டு சண்டைக் காட்சிகள், குரு பிரசாத் மற்றும் குழுவின் ஒளிப்பதிவு என அனைத்து அம்சங்களும் நிறைந்த ‘பீட்சா பாய்ஸ்’ திரைப்படம் டிசம்பர் 4-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


