மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

புதுமுக படக்குழுவினருக்கு முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் வாய்ப்பளித்திருப்பது விழாவில் கலந்துகொண்ட திரையுலகினரின் பாராட்டைப் பெற்றது. தயாரிப்பாளர் ரவி சங்கர் பேசுகையில், இயக்குநர் ராஜா கருப்பசாமி கதை சொன்னபோதே தங்களுக்கு கதை பிடித்துவிட்டதாகவும், குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வெற்றி பெற்ற படங்களின் வரிசையில் ‘மொத ராத்திரி’யும் நல்ல கதைக்களத்துடன் ரசிகர்களை கவரும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

நடிகர் சேத்தன், இசையமைப்பாளர் பரத் சங்கர், எடிட்டர் அசோக் அர்ஜூனன், ஒளிப்பதிவாளர் சுரேஷ் பரஞ்சோதி உள்ளிட்ட படக்குழுவினர், தங்களுக்கு நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு தேவை என்றும் கேட்டுக்கொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குநர்கள் பலரும், ரிஷிகாந்தின் நடிப்பையும் படத்தின் கதைக்களத்தையும் வெகுவாக பாராட்டினர். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ரிஷிகாந்த் கதாபாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக நடித்திருப்பதாகவும், படத்தை பார்க்கும்போது இயக்குநர் பாக்யராஜின் திரைப்படங்களை நினைவுபடுத்தும் உணர்வு ஏற்பட்டதாகவும் கூறினார். ‘அயலான்’ இயக்குநர் ரவிக்குமார், ஒரு கதையை தேர்வு செய்து அதை திரைப்படமாக உருவாக்குவதிலேயே இயக்குநரின் திறமை வெளிப்படுகிறது என்றும், அந்த வகையில் ராஜா கருப்பசாமி சிறப்பாக செயல்பட்டுள்ளதாகவும் பாராட்டினார்.

இயக்குநர் ஸ்ரீகணேஷ், ரிஷிகாந்தை பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அறிந்திருப்பதாகவும், அவர் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படம் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். இயக்குநர் பாரி, பெரிய படங்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தினாலும், சிறிய படங்கள்தான் பல நேரங்களில் ஆச்சரியப்படுத்தும் என்றும், ‘மொத ராத்திரி’ போன்ற படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நடிகை அனிஷ்மா, இப்படத்தில் ‘முத்து செல்வி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், தன்னை தேர்வு செய்த இயக்குநர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தார்.

இயக்குநர் ராஜா கருப்பசாமி பேசும்போது, ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் பங்களிப்பால் தான் இப்படம் உருவானதாக குறிப்பிட்டு அவருக்கு நன்றி தெரிவித்தார். தனது அனுபவங்களிலிருந்து உருவான கதைதான் ‘மொத ராத்திரி’ என்றும், தனது வாழ்க்கையில் இடம்பெற்ற அனைத்து பெண்களுக்கும் இப்படத்தை சமர்ப்பிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், சிறிய பட்ஜெட் திரைப்படங்கள்தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

நாயகன் ரிஷிகாந்த் பேசுகையில், இதுவரை தனது கதாபாத்திரங்களை கவனித்து பாராட்டிய ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், ‘மொத ராத்திரி’ தனது கதாநாயகன் பயணத்தின் முக்கியமான படமாக இருக்கும் என குறிப்பிட்டார். சுமார் ஆறு ஆண்டுகளாக இந்த திரைப்படத்திற்கான பயணம் நடைபெற்றதாகவும், முதலில் குறும்படமாக உருவான கதையை தற்போது முழுநீள திரைப்படமாக உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். தன்னை நம்பிய இயக்குநர் மற்றும் கதை மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் இப்படம் இருக்கும் என்றும் கூறினார்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.