நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படமான ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்குகிறார். இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். இப்படத்தைத் தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் ஏ. எம். பிரபாகரன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்புத் தொடக்க விழா தென்காசியில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், ஐஏஎஸ், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேமராவை இயக்கி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். தொழிலதிபர் எஸ். சாமிநாத பாண்டியன் முன்னிலையில், தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
இப்படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயச்சந்திரன் கலை இயக்கத்தைக் கவனிக்க, வி. ஜே. சபு ஜோசப் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார். ரங்கராஜ் பெருமாள் தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றுகிறார். ராம் குமார் சண்டைப் பயிற்சியையும், ஆனந்தன் ஸ்டில்ஸ் பணிகளையும் கவனிக்கின்றனர். அபினந்தினி எம் ஆடை வடிவமைப்பாளராகவும், இளங்கோ ஏகாம்பரம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், கே. எஸ். ஹேம்ராஜ் தலைமைத் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகின்றனர். எஸ். ஏ. சண்முகம் ஒப்பனைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
தென்காசியில் தொடங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 23 நாட்கள் நடைபெறவுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு, ஜெய் நடிக்கும் ஹாரர் காமெடி மற்றும் அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னாவின் புதிய முயற்சி ஆகிய காரணங்களால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


