
kollywood newsBy sivan|2024-05-20
எலெக்ஷன் - திரைவிமர்சனம்
உள்ளாட்சித் தேர்தலில் உள்ள அரசியல் சூழ்ச்சிகளை எடுத்துச் சொல்லும் கதை.
இரண்டு நண்பர்களில் ஒருவருக்கு கட்சியின் ஆதரவு இல்லாததால் உள்ளாட்சி தேர்தலில் சுயேச்சையாக நிற்க, அதற்கு இன்னொரு நண்பர் கட்சிக் கொள்கையே முக்கியம் என்ற பிடிவாதத்தில், இவருக்கு ஆதரவு அளிக்காமல் போக அவர் தோற்று விடுகிறார். இந்தக் குரோதத்தால் சிறு வயதில் இருந்து காதலித்துக் கொண்டிருந்த உறியடி விஜயகுமார் மற்றும் அந்த நண்பரின் மகள் இருவரையும் பிரித்து விடுகின்றனர்.
ஆனால் அந்தப் பிரிவிலிருந்து மீண்டு வந்த உறியடி விஜய்
குமார், ப்ரீத்தி அஸ்ரனியை திருமணம் செய்துகொண்டு, நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவரது தாய் மாமா பாவல் நவகீதன், அவரை உள்ளாட்சித் தேர்தலில் நிற்கும் படி வற்புறுத்த, அதுமட்டுமில்லாமல் பாவல் நவகீதனின் நண்பனாக வரும் திலீபன், விஜயகுமார் தேர்தலில் நிற்க தேவையான பண உதவிகளை, கடன் மூலமாக ஏற்பாடு செய்து கொடுக்க இவர் இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார். இறுதியில் வெற்றி பெற்றாரா? தோற்றாரா? என்பதுதான் கதை கரு என்றால் அது இல்லை..?
ஆனால் கதையின் ஆரம்பப் புள்ளி இங்கிருந்துதான் தொடங்குகிறது. அழுத்தமான அரசியல் பற்றிச் சொல்லிய ஒரு திருத்தமான கதை.
உறியடி விஜய்குமார் ஒரு காதல் தோல்வி அடைந்தவனாக வாழும் போதும் சரி, ஒரு அரசியல் களத்தில் தேர்தலில் நிற்பவனாக இருக்கும் போதும் சரி, அரசியல் சூழ்ச்சிகளால் தான் சிதறடிக்கப்படும் போதும் சரி தன்னுடைய நடிப்பை மிக எதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
'அயோத்தி' படப்புகழ் ப்ரீத்தி அஸ்ரனி, நம் பக்கத்து வீட்டு பெண் போல ஜொலிக்கிறார். நடிப்பிலும் அருமை.
பாவல் நவகீதனின் அப்பாவித்தனமான நடிப்பும், திலீபனின் எதார்த்த நடிப்பும், ஜார்ஜ் மரியானின் உணர்ச்சிவசமான நடிப்பும் படத்திற்கு மேலும் வலுவை சேர்க்கிறது.
முதல் பட இயக்குனர் தமிழ், அவர்களின் இயக்கமும் சரி, திரைக்கதையும் சரி, வசனமும் சரி, எதார்த்தத்தை மீறாமல் சரியான மீட்டரிலேயே சென்று கொண்டிருப்பது அருமை.
இந்தப் படத்தில் மிகக் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் எதுவென்றால் சண்டை காட்சிகள். எந்த ஒரு ஹீரோயீசமும் இல்லாமல் அவ்வளவு எதார்த்தத்துடன் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகள்.
ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜ் வேலூர் மாவட்டத்தின் கிராமப் பகுதிகளை மிக அழகாக படம் பிடித்திருப்பது அருமை.
கோவிந்த் வசந்தாவின் இசை படத்தை ஒரு படி மேலே எடுத்துச் செல்கிறது.
இந்தப் படம் சொல்லும் மிக முக்கியமான மையக் கரு, உள்ளாட்சித் தேர்தலில் நிற்பவர்கள் பெரும்பாலும் அதை ஒரு கௌரவ பதவியாகவும், சுயசாதி விளம்பரத்துக்காகவும் மட்டுமே நிற்கிறார்கள் என்றும், மக்களின் தேவைகளுக்கும், அங்குள்ள மக்களின் சமூக கலாச்சார கோட்பாடுகளை மீறாமல் உதவி செய்வதற்கும் அல்ல என்பதை புடம் போட்டுக் காட்டி இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றும் கூறி இருக்கிறது.
வழக்கமான அரசியல் நையாண்டித்தனம் இல்லாத, ஒரு அரசியல் படம் பார்க்க வேண்டும் என்றால் இந்த அரசியல் படம் ஒரு நல்ல சாய்ஸ்.
