திவ்ய சேத்ரா பிலிம்ஸ் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க, C.R. ராஜன் தயாரிப்பில் இயக்குநர் அருள் கிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அமரம்’. மூன்று காலகட்டங்கள் மற்றும் மூன்று வெவ்வேறு நிலப்பகுதிகளில் நடைபெறும் அமரக் காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் தேஜஸ் ராஜன் கதாநாயகனாகவும், ஐரா அகர்வால் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘அமரம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பேசிய தயாரிப்பாளர் C.R. ராஜன், ஒரு நல்ல திரைப்படத்தை உருவாக்க கலைஞர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் அவசியம் என்றும், அந்த வகையில் ‘அமரம்’ படத்திற்காக ஒவ்வொரு துறையைச் சேர்ந்த கலைஞர்களும் பணத்தைவிட படைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றியுள்ளதாகவும் தெரிவித்தார். இயக்குநர் அருள் கிருஷ்ணன் கதை கூறியவுடனேயே இப்படத்தைத் தயாரிக்க முடிவு செய்ததாகவும், ஆரம்பத்தில் ரீமேக் படம் தயாரிக்க நினைத்திருந்த நிலையில், ‘அமரம்’ கதையை கேட்டதும் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் அவர் கூறினார். மேலும், படத்தின் தயாரிப்புப் பணிகளில் துரை பாண்டி அளித்த ஒத்துழைப்பையும் அவர் குறிப்பிட்டுப் பாராட்டினார்.
நாயகன் தேஜஸ் ராஜன் பேசுகையில், ‘அமரம்’ திரைப்படம் தனக்கு மிகவும் முக்கியமான படைப்பு என்றும், 40 நாட்களுக்கும் மேலாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் தெரிவித்தார். புயல் சூழலிலும், கொடைக்கானலில் அதிகாலை நேரங்களிலும், எண்ணூர் கடற்கரையிலும் படப்பிடிப்பு நடைபெற்றதாகக் கூறிய அவர், 330க்கும் மேற்பட்ட நடிகர்கள் இந்தப் படத்திற்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளதாக தெரிவித்தார். இயக்குநர் அருள் கிருஷ்ணன் இப்படத்தை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளதாகவும், படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.
இயக்குநர் அருள் கிருஷ்ணன் பேசும்போது, நீண்ட காலமாக சினிமாவில் பயணித்து வருவதாகவும், கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டு திரைத்துறைக்கு வந்ததாகவும் தெரிவித்தார். ஆக்ஷன் திரைப்படத்தை மையமாக வைத்து பிரம்மாண்டமான திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் முயற்சி சில காரணங்களால் கைவிடப்பட்ட நிலையில், பின்னர் ‘அமரம்’ கதையை உருவாக்கியதாக அவர் கூறினார்.
முன்னணி கதாநாயகர்களை அணுகுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், புதுமுக நடிகர்களை வைத்து தரமான கதையை உருவாக்கும் முயற்சியாக ‘அமரம்’ உருவானதாகவும், குறைந்த முதலீட்டில் திட்டமிடலுடன் பிரம்மாண்டமான படைப்பை உருவாக்க முடியும் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணமாக இருக்கும் என்றும் அருள் கிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், இப்படம் ‘புதிய பாதை’, ‘சுப்பிரமணியபுரம்’, ‘பருத்திவீரன்’ போன்ற படங்களின் வரிசையில் ஒரு கல்ட் கிளாசிக்காக உருவாகும் என்று தயாரிப்பாளர் தரப்பில் பாராட்டு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இந்தக் கதை மறுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பேசும் கதை. இப்படியொரு கதையை உருவாக்குவதற்கு நிறைய தைரியம் வேண்டும். அந்தத் தைரியம் தயாரிப்பாளரிடம் இருந்தது” என்று இயக்குநர் அருள் கிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், படத்திற்காக பல கலைஞர்கள் தங்களது சம்பளத்தைப் பெரிதாக எதிர்பார்க்காமல் இணைந்து பணியாற்றியதாகவும், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது என்றும் அவர் கூறினார்.
நாயகி ஐரா அகர்வால், ‘அமரம்’ படத்தின் கதையை இயக்குநர் கூறியபோதே தனக்கு மிகவும் பிடித்ததாகவும், அவரது வழிகாட்டுதலின் மூலம் கதாபாத்திரத்தை சிறப்பாக உள்வாங்கி நடித்ததாகவும் தெரிவித்தார். படத்தின் ஒவ்வொரு துறையிலும் பணியாற்றிய கலைஞர்களின் பங்களிப்பு சிறப்பாக அமைந்துள்ளதாகவும், தேஜஸ் ராஜன், தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மாமன்ற நடுவர் டாக்டர் V. ராமராஜ், ‘அமரம்’ ஒரு வழக்கமான கமர்ஷியல் திரைப்படமாக இல்லாமல் மக்களின் வாழ்க்கை, வலி மற்றும் அவர்களுக்கான நியாயத்தைப் பேசும் படைப்பாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் லோக் ஆயுக்தா தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டிய அவசியம் குறித்தும் அவர் பேசினார்.
‘அமரம்’ திரைப்படத்திற்கு பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மிக்கி ஜெ. மேயர் இசையமைத்துள்ளார். ‘வட சென்னை’, ‘அசுரன்’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய R. ஸ்ரீராமர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவை பரத் குமாரும், கலை இயக்கத்தை ஜனார்த்தனனும், சண்டைக் காட்சிகளை மிராக்கிள் மைக்கேலும், நடனத்தை பூபதியும் கவனித்துள்ளனர். பாடல்களை சினேகன் மற்றும் சௌந்தரராஜன். K எழுதியுள்ளனர்.
இப்படத்தை Traident Arts நிறுவனத்தின் ரவீந்திரன் ஆகஸ்ட் 28ஆம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார். ‘அமரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பைப் பெறும் என்பது அதன் வெளியீட்டிற்குப் பிறகு தெரியவரும்.


